வாசகர்கள்

visitor counter 

 

செபம்

 


செபம் என்பது என்ன?


கடவுளோடு உரையாடுவது செபம். ஒரு நல்ல நண்பர் நமக்கு இருந்தால் நம் எல்லா விடயங்களையும் மனம் விட்டு பகிர்ந்து கொள்வது நட்புக்கான இலக்கணம். கடவுளிடம் நாம் நம் வாழ்க்கையை பற்றி பேசுவதே செபம். நாம் கடவுளிடம் நமது இதயத்தை திறந்து பேசுவதும், நம்மோடு பேசும் கடவுளின் வார்த்தைக்கு திறந்த மனத்துடன் செவிமடுப்பதுமே செபம்.

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும். - பிலிப் 4:6-7

 

 

 

 

எதற்காக செபம் செய்ய வேண்டும்?


கடவுளின் அருகில் நாம் நெருங்கிவர செபம் நமக்குத் துணைசெய்கிறது. கடவுளிடம் நாம் பெற்ற நன்மைகளுக்கு நன்றிசொல்லும் போதும், அவர் புகழ் பாடும் போதும், நமது பாவங்களுக்காக மனம் வருந்தும் போதும், நமது பலவீனத்தில் அவரது உதவியை நாடும் போதும், அவர் சித்தத்தை நிறைவேற்றும் போதும், கடவுள் நம்மோடு பேசுகிறார். கடவுள் நமது சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றி நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதைச் செய்யத் தூண்டுகிறார். நாம் செபம் செய்வதன் மூலம் கடவுளின் சித்தத்தை நிறைவேற்ற அதிக வாய்ப்பை நமக்குக் கொடுக்கின்றார். இதன் மூலம் நாம் கடவுளில் இணைந்து வாழும் பேற்றைப் பெறுகிறோம். முத்திப்பேறு பெற்ற அன்னைத் தெராசாவும் மற்ற புனிதர்களும் இப் பேற்றைப் பெற்றவர்களே.

கேளுங்கள்: பெற்றுக் கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும். - யோவான் 16:24

 

 

 

 

யாரிடம் செபம் செய்ய வேண்டும்? கடவுளிடமா? யேசுவிடமா? தூய ஆவியிடமா? புனிதர்களிடமா?

 


நாம் கடவுளிடமோ அல்லது யேசுவிடமோ அல்லது தூய ஆவியிடமோ செபம் செய்யலாம். இந்த மூவரிடமும் எழுப்பப்படும் செபங்கள் விவிலியத்தில் அனேக இடங்களில் காணப்படுகின்றன. கடவுள் ஒருவர்தான். இயேசுவிடம் செபம் செய்யும் போது இறைத் தந்தையிடமும் நாம் செபம் செய்கிறோம். நாம் செபம் செய்யும் வார்த்தைகளையும் கடந்து கடவுள் நம் உள்ளத்தையும் எண்ணங்களையும் அறியக்கூடியவர்.

புனிதர்கள் கடவுள் அல்ல. அவர்கள் கடவுளின் விருப்பத்தின்படி இவ்வுலகில் வாழ்ந்த மனிதர்கள். தங்களின் தூய வாழ்வால் விண்ணகத்தை சுதந்தரித்துக் கொண்டவர்கள். அவர்கள் இறைவனின் அருகில் அமர்ந்திருக்கிறார்கள், நமக்காக கடவுளிடம் பரிந்து பேசுகிறார்கள், நாம் செய்யும் வேண்டுதல்களை கடவுளிடம் மன்றாடி நமக்குப் பெற்றுத் தருகிறார்கள் என்பதே நமது விசுவாசம்.

 

சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை முன்னிட்டும் தூய ஆவி நம் உள்ளத்தில் பொழிந்துள்ள அன்பை முன்னிட்டும் நான் உங்களைக் கேட்டுக் கொள்வது: எனக்காகக் கடவுளிடம் வேண்டி, என் போராட்டத்தில் எனக்குத் துணை செய்யுங்கள் எனக்காகக் கடவுளிடம் வேண்டி, என் போராட்டத்தில் எனக்குத் துணை செய்யுங்கள். - உரோ 15:30

 

 

கடவுளாகிய இயேசு ஏன் செபம் செய்தார்?


இயேசு கடவுளும் மனிதனுமானவர். இந்த உலகில் இயேசு முழு மனிதனாக அவதரித்தார். அவர் கடவுளாயிருந்தாலும் இந்த உலகின் மனிதரைப் போல் மனிதராக வாழ்ந்தார். அவர் இறை தந்தையைச் சார்ந்து வாழ்ந்தார். எல்லாவற்றிலும் இறை தந்தையின் சித்தத்தையே நிறைவேற்றுகின்றார். இறை தந்தையை முழுமையாக அன்பு செய்து அவரில் வாழ்வதே வாழ்வாகக் கொண்டிருந்தார். ஆகவே அவரோடு உரையாடுவதில் அதிக நேரத்தை கழிக்கின்றதை நாம் நற்செய்திகளில் காண்கின்றோம்.

 

அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்றவல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார். அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். - எபிரே 5:7-8

 

 

 

கடவுள் நம் தேவைகளையும் அறிந்திருப்பவர். பின்னர் நாம் ஏன் நம் தேவைகளுக்ககாக செபிக்க வேண்டும்? ஏன் மீண்டும் மீண்டும் செபிக்கவேண்டும்?


நாம் செபம் செய்யும் போது தாழ்ச்சியான உள்ளத்தையும் கடவுள் முன் நம்முடைய இயலாமையையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறு செய்வது கொடுத்துக்கொண்டே இருக்கின்ற கடவுளின் கொடைகளை நாம் பெறுவதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ளும் கருவியாக செபம் அமைகின்றது. ஆகவே நாம் தொடாந்து செபம் செய்ய வேண்டும்.

உம் அடியானின்; மனத்தை மகிழச் செய்யும்: என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்: மன்னிப்பவர்: உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்: உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். என் துன்ப நாளில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்: நீரும் எனக்குப் பதிலளிப்பீர். சங்கீதம் - 86:4-7

 

 

எந்த நிலையில் செபம் செய்யவேண்டும்?

முழந்தாள்படியிட்டு....? கைகூப்பி....?


விவிலியத்தில் மக்கள் செபம் செய்யும் போது பல்வேறு நிலைகளில் செபிக்கின்றதைக் காண்கிறோம். நின்றுகொண்டு, கைகளை உயர்தி, கவிழ்ந்து, உட்கார்ந்து, முழந்தாள்படியிட்டு செபித்திருக்கிறார்கள். எந்நிலையிலும் செபிக்கலாம் என்றாலும் முடிகின்ற சூழ்நிலைகளில் முழந்தாள் படியிட்டு கைகூப்பி செபிப்பது கடவுளுக்கு முன் நமது தாழ்ச்சியையும் பணிவையும் எடுத்துக்காட்டும் வண்ணமாக அமைகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையாக, பயபக்தியோடு செபிப்பது உகந்தது.

 

என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்: அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது: நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே: கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. சங்கீதம் - 51:15-17

 

 

 

கடவுளிடம் நாம் செய்யும் செபம் சில வேளைகளில் கேட்கப்படுவதில்லையே ஏன்?


கடவுள் நம்மைவிட ஞானம் மிக்கவர். யார் யாருக்கு என்ன தேவை எப்போது தேவை என்பதை அவர் அறிவார். அவர் எப்போழுதும் நமக்கு நன்மையே செய்வார். சிலவேளைகளில் கடவுளின் திட்டம் மனித ஞானத்திற்கு எட்டுவதில்லை. ஆகவே கடவுள் நம் செபத்தை கேட்காதவர் போல் நமக்குத் தெரிகிறது.

 

சிலவேளைகளில் சுயநலத்தோடு செபம் செய்கிறோம். அரசர் சாலமோன் கடவுளிடம் ஞானத்தைக் கேட்டார். பொருட்செல்வமோ அல்லது படையோ, மேலும் அதிகாரத்தையோ அல்லது மேலும் அரசுகளையோ கேட்காததால் கடவுள் அனைத்தையும் அவருக்குக் கொடுத்தார்.

 

அல்லது கடவுளின் திட்டத்திற்கு மாறுபட்டு நம் எண்ணங்கள் அமைவதால் நம் செபம் கேட்கப்படுவதில்லை. சில சமயங்களில் நம் செபம் நேரடியாகக் கேட்கப்படாமல் வேறுவிதமாக நிறைவேற்றப்படுகிறது.

 

எல்லாவற்றிற்கும் மேலாக கடவுள் நம் செபங்களைக் கேட்டருள்வார் என்ற ஆழ்ந்த விசுவாசமும் கடவுளின் அன்பும் பராமரிப்பும் நம் வாழ்வில் நிலைபெறும் என்ற உறுதியான நம்பிக்கையும் அனைத்திலும் கடவுளின் சித்தம் நிறைவேற்றப்படவும் தொடர்ந்து செபிக்க வேண்டும்.

 

அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.பின் ஆண்டவர் அவர்களிடம், 'நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். - லூக்கா - 18:1,6-8

 

பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார்: 'தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல: உம் விருப்பப்படியே நிகழட்டும்' என்று கூறினார். லூக்கா. - 22:41-42

 

 

 

 

அச்சிடப்பட்ட அல்லது மனப்பாடம் செய்த ஜெபங்கள் ஜெபிப்பதற்கு உகந்ததா?


இப்படித்தான் செபம் செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை கடவுள் நம்மிடம் எதிர்பார்கவில்லை. அச்சிடப்பட்ட அல்லது அனுதினம் நாம் அறிந்த செபங்களைப் பயன்படுத்துவது செபம் செய்ய உதவிசெய்யுமானால் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக கர்த்தர் கற்பித்த செபம், மங்கள வார்தை செபம், தெரிந்த சங்கீதங்களை செபிப்பது அல்லது பாடுவது சிறந்த செபம். அச்சிடப்பட்ட செபங்களை செபிக்கும் போது கடகட வென ஒப்பிக்காமல், பொருளுணர்ந்து மன ஈடுபாட்டுடன் செபிப்பது மேன்மைக்குரியது. (எடுத்துக்காட்டு: பரிசுத்த ஆவியானவர் செபம்).

 

மேலும் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்: மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்:' விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! ..... மத் 6:7-9