வாசகர்கள்

visitor counter 

 

 

 

 

திருவருட்சாதனங்கள் 7 வகைப்படும் அவையாதெனில்

 

1. திருமுழுக்கு

2. ஒப்புறவு

3. திவ்ய நற்கருணை

4. உறுதிப்பூசுதல்

5. திருமணம்

6. குருத்துவம்

7. நோயில் பூசுதல்

திருமுழுக்கு

 

திருமுழுக்கு என்னும் திருவருட்சாதனம் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையாக அமைகிறது. கத்தோலிக் திருமறையின் மற்ற அருட்சாதனங்களைப் பெற நுழைவாயிலாகவும் அமைகிறது. திருமுழுக்கின் வழியாக ஜென்மப்பாவம்,கர்ம பாவம் நீக்கப் பட்டு நாம் கடவுளுடைய பிள்ளைகள் ஆகிறோம். மேலும் தூய ஆவியில் நாம் புதுப்பிறப்படைந்து கடவுளின் உரிமைப்பேறாகும் பேற்றினைப் பெறுகிறோம். கத்தோலிக்கத் திருமறையின் அங்கத்தினர் ஆகிறோம்.
திருமுழுக்கின் வழியாக நாம் புதுப்பிறப்படைவதோடு நாம் பெற்றுக்கொண்ட விசுவாசத்தை மனிதர்முன் வெளிப்படையாக அறிக்கையிட கடமைப்பட்டவர்களாகிறோம். நாம் |கிறிஸ்தவனாக| |கிறிஸ்தவளாக| வாழ அழைக்கப்படுகிறோம்.

 

தண்ணீர்:


தண்ணீர் பொதுவாக நாம் வாழ்வின் இன்றியமையாத பொருளாக அமைகிறது. தண்ணீரானது அனேக வேளைகளில்; சுத்தப்படுத்தப் பயன்படுத்துகிறோம். திருமுழுக்கில் தண்ணீரானது முக்கிய இடம் பெறுகிறது. தண்ணீர் பாவங்களை கழுவி கிறிஸ்துவில் நாம் மறுபிறப்படைந்துள்ளதையும் கிறிஸ்துவில் புதுவாழ்வு பெற்று அவரது உயிர்பிலும் பங்கு பெறுவோம் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம்.( உரோமையர் 6:4-5)

 

 

ஆயத்த எண்ணை பூசுதல்:


திருமுழுக்குப் பெறுவோர் கிறிஸ்துவில் புதுப்படைப்பாக மாற்ற வேண்டி இப் புனித தைலம் பூசப்படுகிறது.

வாக்குறுதிகளும் விசுவாச பிரமாணமும்:
சாத்தானையும் அதன் செயல்களையும் விட்டுவிடுவதாகவும் கிறிஸ்தவ விசுவாசத்தைக் கடைப்பிடிப்பதாகவும் பெற்றோரும் ஞானத் தாய் தந்தையரும் வாக்குறுதி கொடுக்கின்றனர்.

 

திருத்தைலம் பூசுதல்:


திருமுழுக்குப் பெற்றவர் புதுப்பிறப்படைந்த கிறிஸ்துவில் பெற்ற புதுவாழ்வில் கடைசிவரை நிலைத்து நிற்க வேண்டி |கிறிஸ்மா| தைலம் பூசப்படுகிறது.

 

வெண்ணிற ஆடை:


புதுப்படைப்பாக மாறியதையயும் அம்மாசற்ற வாழ்வை உங்கள் உறவினரின் சொல்லாலும் முன்மாதிரியாலும் மாசுபடாமல் முடிவில்லா வாழ்வுக்கு கொண்டுபோய் கொண்டுபோய் சேர்க்க அருள் வேண்டப்படுகிறது.

 

எரியும் திரி:


பெற்றோர்களே, ஞானத்தாய் தந்தையரே உங்கள் குழந்தைகளின் உள்ளத்தில் அணையாது காக்கும்பொருட்டு உங்களிடம் இந்த ஒளி ஒப்படைக்கப்படுகிறது. கிறிஸ்துவினால் ஒளிபெற்று திருமுழுக்குப் பெற்றவர் ஒளியின் மக்களாய் என்றும் வாழ்வார்களாக. விசுவாசத்தில் இவர்கள் நிலைத்திருந்து ஆண்டவர் வரும்போது புனிதர் அனைவரோடும், வான்வீட்டில் அவரை எதிர்கொண்டு செல்லத் தகுதிபெறுவார்களாக.

 

எப்பேத்தா (திறக்கப்படு):


குரு : செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும் ஆண்டவர் இயேசு செய்தருளினார், நீ விரைவில் அவரது வார்த்தையை தந்தையாகிய இறைவனின் புகழும், மகிமையும் விளங்கக் காதல் கேட்கவும், அவ்விசுவாசத்தை நாவால் அறிக்கையிடவும் அவரே செய்தருள்வாராக.

தங்கள் குழந்தைகளுக்கு திருமுழுக்கு பெறவேண்டும் பெற்றோர்களிடம் திருச்சபை எதிர்பாhர்ப்பவை:
1. திருமுழுக்கு அருட்சாதனத்தின் போது பெற்றோரும் ஞானத் தாய், தந்தையும் கொடுத்த வாக்குறுதிகளின் படி அவர்கள் விசுவாசத்தின் சிறந்த மாதிரியாய் விளங்க முயற்சி செய்யவேண்டும்.

2. பிள்ளைகள் வளரும் போது அவர்களுக்கு கத்தோலிக்க விசுவாசத்தை கற்றுக்கொடுக்க போதிய சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதும், பிள்ளைகளை கத்தோலிக்க பள்ளிகளில் சேரச் செய்யவும், போதிய மறைக்கல்வியை கற்றுக் கொடுப்பதும் அல்லது கற்றுக்கொடுக்க வழிசெய்வதும் முக்கிய கடமையாகும்.

3. குடும்பமாக ஜெபிப்பதும், சிறு பக்தி முயற்சிகளை சொல்லிக் கொடுப்பதும் எல்லாவற்றிகும் மேலாக கிறிஸ்தவ வாழ்வின் மதிப்பீடுகளான அன்பு, மகிழ்சி, சமாதானம், மன்னித்தல், பொறுமை, தாழ்ச்சி, நம்பிக்கை, விசுவாசம் ஆகிய புண்ணியங்களை பெற்றோர் பின்பற்றுவதும் பிள்ளைகளை அவ்வாறு வளர்பதும் பெற்றோரின் கடமையாகும்.

4. ஞானப் பெற்றோர்கள் நல்ல கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக தேர்ந்தெடுப்பது பெற்றோரின் கடமை. ஞானப் பெற்றோர்களும் தங்களின் ஞான்ப பிள்ளைகளுக்கு சிறந்த முன் மாதிரியாய் இருப்பதும் ஞான காரியங்களில் அவர்களை ஊக்குவிப்பதும் முக்கிய கடமையாகும்.

 

 

 

 

ஒப்புறவு

 

முன்னுரை:


திருமுழுக்கு, நற்கருணை, உறுதிப்பூசுதல் வழியாக நாம் கடவுளின் அருளைபெற்று கிறிஸ்துவில் புதுவாழ்வு வாழ அழைக்கப்பட்டிருந்தாலும், சோதனைகள், மனித பலவீனம், உலக துன்பங்கள், மாயக் கவர்ச்சிகள்,பேராசை, சுயநலம் ஆகியவை மனிதரை பாவத்தில் விழத்தாட்டுகின்றன. ஆனால் இறைமகன் இயேசு நம்மை ஒப்புரவு அருட்சாதனத்தின் வழியாக பாவத்திலிருந்து மீட்டு புதுவாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார்.
ஒப்புரவு அருட்சாதனம் பாவசங்கீத்தனம், பச்சாதாபம், என்றும் அழைக்கப்படுகிறது.

இறைவார்த்தையில் ஒப்புரவு


'மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்!' (மாற்.1 ளூ 15) எனும் முழக்கத்தோடு இயேசு தம் மீட்புப் பணியைத் தொடங்கினார். உயிர்த்தபின், தம் சீடர்களின் மேல் ஊதி, 'தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா!' (யோ. 1 ளூ 22-23) என்று கூறி ஒப்புரவு அருளடையாளத்தை ஏற்படுத்தினார்.

இறைவனின் இரக்கப் பெருக்கால் நாம் ஒப்புரவைப் பெறும்போது, நம்மை முதலில் அன்பு செய்தவரான பரம தந்தையிடம் திரும்புகிறோம். (1யோ. 4 ளூ 19) நமக்காகத் தம்மையே கையளித்த இயேசுவிடம் திரும்பி வருகிறோம். (கலா.2 ளூ 20, எபே. 5 ளூ25), நம் மீது ஏராளமாய்ப் பொழியப்படும் தூய ஆவியிடம் திரும்பி வருகிறோம். (தீத்து 3 ளூ 6) இவ்வாறு, இறைவனோடு ஒப்புரவாகும் நாம், திருச்சபையோடும் அதன் உறுப்புகளான நம் சகோதரர்களோடும் ஒப்புரவாகின்றோம்.

முக்கிய கூறு:


ஒப்புரவு அருட்சாதனத்தின் மையக்கூறு பாவத்திற்காக மனம் வருந்துதல். மனம் வருந்துதல் இன்றி பாவமன்னிப்பு இல்லை. பாவங்களை மன்னிப்பது கடவுளே. குருவானவர் இங்கே கடவுளின் பிரதிநிதியாக செயல்படுகிறார். நாம் மனமுவந்து இவ்வருட்சாதனத்தை பெற செல்வதே நாம் நம் பாவங்களுக்காக வருந்தும் ஒரு அடையாளமாக இருந்தாலும் குருவிடம் நாம் செய்த பாவங்களுக்காக மனம் வருந்துவதாக அறிக்கை இடுவது போற்றுதற்குறிய செயல். நாம் குருவிடம் அறிக்கையிட்ட பாவங்களை அவர் நினைவில் கொள்வதுமில்லை, அடுத்தவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுத்துவதுமில்லை என்பது நிச்சயம்.

 

பாவம் என்பது என்ன?
கடவுளின் அன்பைப் புறக்கணிப்பது பாவம். கடவுளின் அன்பை நாம் எவ்வாறு புறக்கணிக்கமுடியும்? கடவுள் அன்பே வடிவானவர். அந்த அன்பின் வெளிப்பாடு இயேசு கிறிஸ்து. கிறிஸ்தவர்களான நாமும் அதே அன்பில் வாழ அழைக்கப்படுகிறோம். இத்தகைய அன்பில் வாழாமல் சுயநலத்திலும், உலக இன்பத்திலும் முழ்கி, கடவுள் நமக்கு கொடுத்த அன்புக் கட்டளைக்கு எதிராக செயல்படும்போது கடவுளின் அன்பைப் புறக்கணிக்கிறோம். நம்மை அன்பு செய்யும் கடவுளுக்கு எதிராகவும், அன்புசெய்து வாழவேண்டிய சகோதர சகோதரிகளுக்கு எதிராகவும் பாவம் செய்கிறோம்.

பாவத்தில் கனாகனம் உண்டா?
உண்டு. அற்ப காரியத்திலோ அல்லது முழு ஈடுபாடில்லாமலோ, அல்லது அறியாமையிலோ நாம் செய்யும் தவறுகள், குற்றங்கள் அற்ப பாவம். எடுத்துக்காட்டு -நமது சௌகரியத்திற்காக சிறு பொய் சொல்லுதல்(அடுத்தவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாது). கடவுளின் உறவில் பாதிப்பு ஏற்படுத்தினாலும் எழிதாக மீண்டும் அன்புறவை ஏற்படுத்திக் கொள்ள இயலும்.
கனமான காரியத்தில், மனம் பொருந்தி, முழு ஈடுபாட்டுடன், பாவம் என அறிந்தும் அதைச் செய்வது சாவான பாவம். எடுத்துக்காட்டு: மனமறிந்து மோக பாவம் செய்வது, கொலை செய்வது, போன்றவையாகும். (அடுத்தவர்களுக்குப் பாதிப்பு அதிகமாக இருக்க கூடிய செயல்கள் அனைத்தும்) இவை நமது ஆன்மாவை முற்றிலுமாக சாவுக்கு இட்டுச் செல்லும் காரியங்கள். கடவுளோடு உள்ள அன்புறவு முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நிலையை ஏற்படுத்துகிறது.

எவ்வாறு இந்த அருட்சாதனத்தை பெறுவதற்கு தயாரிப்பது?
சரியான ஆன்ம சோதனை செய்து பார்த்து அப் பாவங்களுக்காக மனம் வருந்தவேண்டும்.
ஆன்ம சோதனை இரு முறைகளில் செய்யலாம்:
1. பத்து கட்டளைகளை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்து பாவங்களை நினைவிற்கு கொண்டு வருதல்.
2. கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவு நிலையை ஆராய்ந்து பார்த்தல்ளூ அடுத்தவர்களுக்கும் நமக்கும் உள்ள உறவு நிலையை ஆராய்ந்து பார்த்தல்ளூ தன்னிலை செயல்களை ஆராய்ந்து பார்த்தல்.

ஒப்புரவு பெறும் முறை என்ன?

செய்த பாவங்களை நினைவில் கொண்டு வருதல்.

அவற்றிற்காக மனம் வருந்துதல்.

இனி பாவம் செய்வதில்லை என்று தீர்மானித்தல்.

குருவிடம் பாவங்களை அறிக்கையிடுதல்.

நாம் பாவ மன்னிப்பு அடைந்துள்ளோம் என்பதைக் காட்ட நமக்கு தீமை செய்தோரை நாமும் மன்னித்தல்.

 

மாதிரி ஆன்ம சோதனை:


1. உன் ஆண்டவராகிய கடவுள் நாமே. நம்மைத்தவிர வேறு கடவுள் இல்லை
- எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளுக்கு முதலிடம் தந்தேனா?
- பிற தெய்வங்களுக்குத் துதி பாடினேனா? வணங்கினேனா?
- மாந்தரீகம், மூட நம்பிக்கை, ஜோதிடம், பில்லி, சூனியம் போன்றவற்றிற்கு இடம் கொடுத்தேனா?
- என்னுடைய கிறிஸ்தவ விசுவாசத்தை பிறர் முன் காட்டத் தயங்கினேனா?
- துன்ப நேரத்தில் கடவுளுடைய அன்பு, பராமரிப்பில் நம்பிக்கை இழந்தேனா?


2. கடவுளின் திருப்பெயரை வீணாகச் சொல்லாதே.
- கடவுளுடைய திருப்பெயரை வீணாகச் சொல்லியிருக்கிறேனா?
- இறைவனின் ஆலயத்தை புனிதமாக மதிக்கத் தவறிஇருக்கிறேனா?


3. கடவுளின் நாள்களைப் புனிதமாக அனுசரி.
- ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் குறைந்த பட்ச முயற்சியாக திருப்பலி, திருவிருந்தில் பங்குகொள்ளத் தவறினேனா?
- தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டு கடவுளுக்கும், ஜெபிப்பதற்கும் அதிக நேரத்தை செலவுசெய்யத் தவறினேனா?


4. தாய், தந்தையை மதித்துப் பேணு.
- என்னுடைய பெற்றேர்களுக்குத் தக்க மரியாதையை கொடுக்கத் தவறினேனா? பணிந்து நடக்காமல் இருந்தேனா?
- அவர்களை மதித்து நடந்தேனா? எக்காரியத்திலாவது நான் அவர்களை மனம் நோகச் செய்தேனா?
- பெற்றோர்களின் வயதான காலத்தில் அல்லது அவர்களின் முடியாத காலத்தில் அவர்களை மாண்புடனும் என்னால் முடிந்த அளவு அவர்களுக்கு சௌரியங்களைச் செய்து கொடுத்து அன்புடன் நடத்தத் தவறியிருக்கிறேனா? கனிவுடன் பேசத் தவறியிருக்கிறேனா?
- என்னுடைய பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய அன்பையும் பாசத்தையும் கொடுக்கத் தவறினேனா?
- என்னுடைய குடும்பத்திலுள்ள அனைவருக்கும் என்னால் முடிந்தவரை உதவி செய்து கரிசனையோடு நடக்கத் தவறினேனா?
- என்னுடைய அலுவல் மட்டில் என்னுடைய மேல் அதிகாரிகளுக்கு மதிப்புகொடுக்கத் தவறினேனா?
- என்னுடைய குடும்ப அளவிலும் அலுவலக அளவிலும் என்னுடைய கடமையை செய்யத் தவறினேனா?

 

 

5. கொலை செய்யாதே.
- வேண்டுமென்றே பிறருக்குத் தீங்கு செய்தேனா?
- பிறருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினேனா?
- பிறரைப் பற்றி அவதூறு கூறினேனா?
- பிறர் மனம் நோகும் படியாக தீய சொற்கள் பேசினேனா?
- யாரையாவது நான் வெறுத்து அவர்களுக்குத் தீயது நடக்கவேண்டும் என்று நினைத்ததுண்டா?
- யார்மீதாவது பகைமையும் வஞ்சினத்தையும் நெஞ்சில் கொண்டு மன்னிக்க முடியாமல் இருக்கிறேனா?
- நேரடியாகவோ மறைமுகமாகவோ கருக்கலைப்புக்கு ஈடுபட்னேனா? உதவிசெய்தேனா?
- தற்கொலை முயற்சி அல்லது எண்ணம் போன்றவற்றில் ஈடுபட்டேனா?
- பிறருக்குத் துர்மாதிரியாக செயல்பட்டேனா?
- பிற உயிரினங்களை வதைத்தேனா? கொடுமையுடன் நடந்துகொண்டேனா?

 

 

6. மோக பாவம் செய்யாதே.
- என்னுடைய நடை உடை பாவனைகளில் வீண் கவர்ச்சியைத் தேடியிருக்கிறேனா?
- தீய படங்களையோ, புத்தகங்களையோ படித்தேனா? பார்த்தேனா?
- தீய எண்ணங்கள் தானாக மனத்தில் தோன்றியபோது அதை உடனடியாக விலக்கமல் இன்பம் அடைந்தேனா?
- என்னுடைய சொல்லாலும் செயலாலும் துர்மாதிரியாக நடந்தேனா?
- என்னுடைய உடலை தூய ஆவியின் ஆலயம் என மதிக்காமல் சுய இன்பத்தில் ஈடுபட்டேனா?
- பிறரை தவரான நோக்கோடு பார்த்தேனா? மனத்தில் எண்ணினேனா? பழகினேனா?
- பிறருடைய உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் பேசினேனா? நடந்தேனா? பழகினேனா?
- திருமணம் ஆவதற்கு முன் தவறான உறவில் ஈடுபட்டேனா?
- திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்துகிறேனா?

 

 

7. களவு செய்யாதே.
- பிறருடைய பொருட்களுக்கு ஆசைப்பட்டிருக்கிறேனா? எடுத்திருக்கிறேனா?
- கண்டெடுத்த பொருளை இன்னாரது பொருள் என்று தெரிந்தபின்னும் தொடர்ந்து வைத்திருக்கிறேனா?
- கண்டெடுத்த பொருளை உரியவரிடம் சேர்க்க தக்க முயற்சி செய்யாமல் தொடர்ந்து வைத்திருக்கிறேனா?
- பிறருடைய பொருள்களையோ சொத்துக்களையோ வேண்டுமென்று சேதப்படுத்தியிருக்கிறேனா?
- பிறருக்கு கொடுக்கப்பட வேண்டிய அல்லது சேர வேண்டிய பொருளையோ பணத்தையோ கபளீகரம் செய்துகொண்டிருக்கிறேனா?
- சூதாட்டத்தில் ஈடுபட்டேனா?
- களவு செய்யபட்ட பொருள் என்று தெரிந்தும் குறைந்த விலை என்பதற்காக வாங்கி களவு செய்தலை உற்சாகப்படுத்தினேனா?

 

8. பொய் சாட்சி சொல்லாதே.
- என்னுடைய சுயநலத்திற்காக பொய் சொல்லியிருக்கிறேனா?
- பொய் என்று தெரிந்தும் அது உண்மை என்று வாதிட்டிருக்கறேனா? சாட்சி கூறினேனா?
- பிறரைப்பற்றி புறணி பேசினேனா?
- அடுத்வர்களை கேலி, பரிகாசத்துக்குள்ளாக்கி இருக்கிறேனா?
- இரகசியம் காக்கப்படவேண்டிய உண்மைகளை தீய உள்ளத்துடன் வெளிப்படுத்தினேனா?
- பிறர் செய்த குற்றத்தை அல்லது பாவத்தை பறைசாற்றினேனா?
- அடுத்தவர்களை தீர்ப்பிட்டேனா?

 

9. பிறர் தாரத்தை விரும்பாதே.
- திருமணத்திற்குப் பின் என் அன்பை வெளிப்படுத்த தவறிஇருக்கிறேனா?
- மனைவியை வெறும் போகப் பெருளாக நடத்துகிறேனா?
- கணவர் அல்லது மனைவிக்கு தக்க அன்பையும மரியாதையையும உரிமையையும் கொடுக்கத் தவறிஇருக்கிறேனா?
- திருமணஉறவிற்கு அப்பாற்பட்டு எனது சிந்தனைகளை வேறு ஒருவரிடம் செலுத்துகிறேனா?
- என்னுடைய கணவர் அல்லது மனைவி தவிர்த்து பிறருடன் தவறான உறவில் ஈடுபட்டேனா?
- என்னுடைய திருமண உடன்படிக்கையை மீறி வேறு நபருடன் உறவு வைத்துள்ளேனா?
- தாம்பத்திய உறவில் திருச்சபையின் போதனையை மீறி நடந்திருக்கிறேனா?

 

10. பிறர் உடைமையை விரும்பாதே.
- அடுத்தவரிடம் காணப்படும் திறமைகளையும், செல்வத்தையும், நற்குணங்களைக் கண்டு பொறாமைப் பட்டேனா?
- பிறரை ஏமாற்றி அல்லது நேர்மையற்ற முறையில் பணமோ பொருளோ சம்பாதித்தேனா?
- பிறருடைய அறிவுசார்ந்த (காட்சி, இசை, மென்பொருள்) உடமையை தவரான முறையில் பயன்படுத்தினேனா?
பொதுவானவை:
- என்னுடைய ஆன்மீக வாழ்விற்குத் தேவையான ஜெபம் என்வாழ்வில் முக்கிய இடம் பெறாமல் இருக்கின்றதா?
- கிறிஸ்தவ வாழ்வின் மதிப்பீடுகளை வாழ்ந்து காட்ட கடவுளிடன் அருளைக் கேட்காமல் இருந்தேனா?
- கிறிஸ்துவ வாழ்வில் துன்பம் வருகின்ற வேளைகளில் அதை தாங்கிக்கொள்ள இறைவனிடம் சக்தியை கேட்காமல் இருந்திருக்கிறேனா?
- பிறரை மன்னிக்கின்ற நற்குணம் இல்லாமல் இருக்கிறேனா?
- என்னை பகைவர் என்று நினைப்பர்களுக்காக ஜெபம் செய்கிறேனா?
- என்னுடைய தேவைகளில் பிறர் உதவியை நாடாது தற்பெருமை கொண்டுள்ளேனா?
- கடவுள் எனக்கு கொடுத்திருக்கின்ற திறமைகளையும் செல்வத்தையும் பிறறோடு பகிர்ந்து கொள்வதில் தாராளமுடன் இருக்கிறேனா?
- உதவி செய்ய வசதியும் வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் கிடைத்தபோது சுயநலத்தோடு நடந்துகொண்டேனா?
- உலக சமாதானத்திற்காகவும் மனித நேயத்திற்காகவும் ஜெபம் செய்ய மறந்திருக்கிறேனா?
- நான், எனது குடும்பம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து விடுபட்டு பரந்த மனத்துடன் அனைவருக்காகவும் உதவி - தேவைப் படுவோர்காகவும் உதவிசெய்ய, ஜெபம் செய்ய தயாராய் இருக்கிறேனா?
- என்னுடைய ஞான மேய்ப்பர்களுக்கு என்னாலான உதவியைச் செய்கிறேனா?

எந்த அளவுக்கு கடவுள் எனக்கு திறமைகளையும், அருட்செல்வத்தையும், பொருட்செல்வவத்தையும் கொடுத்திருக்கிறாறோ அந்த அளவுக்கு அதிகமாக என்னிடம் பிறரன்புச் சேவையும் எதிர்பார்க்கிறார் என்பதை உணர்ந்து பிறரன்புச் சேவையிலும், திருச்சபைக்கும் என்னால் இயன்ற பொருளுதவியைச் செய்வதிலும், நேரத்தையும், சக்தியையும் கொடுப்பதில் தாராளமாய் இருக்கின்றேனா?

 

 

 

திவ்ய நற்கருணை

 

 

கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை:


திருமுழுக்கு, உறுதிப் பூசுதல், நற்கருணை ஆகிய மூன்றும் புகுமுக திருவருட்சாதனங்கள். இவற்றின் வழியாகவே நாம் 'இருளின் அதிகாரத்தினின்று விடுவிக்கப்பட்டு , கிறிஸ்துவோடு இறந்து, அவரோடு உயிர்க்கிறோம்ளூ சுவிகாரப் பிள்ளைகளுக்கு உரிய ஆவியாரைப் பெற்றுக் கொள்கிறோம்ளூ இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து ஆண்டவருடைய சாவு, உயிர்ப்பு இவற்றின் நினைவாகக் கொண்டாடுகிறோம்' (மறை அறிவிப்புப் பணி, 14)

திருப்பலி கிறிஸ்தவ வாழ்வின் ஆதாரமும் கொடுமுடியுமாகும். அனைத்து மற்ற அருட்சாதனங்கள் இதோடு பிணைக்கப்பட்டுள்ளன. குருவானவர் திருப்பலி நிறைவேற்றும் போது கோதுமை அப்பமும் திராட்சை இரசமும் மெய்யாகவே இயேசு கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகிறது என்பதே கத்தோலிக்க விசுவாசம். மற்ற திருவருட்சாதனங்களில் கடவுளின் கொடைகளை நாம் பெறுகிறோம். ஆனால் நற்கருணை என்னும் இத்திருவருட்சாதனத்தில் கடவுள் தம்மையே நமக்குத் தருகிறார்.

நற்கருணை என்னும் இத்திருவருட்சாதனம் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறதுளூ திருப்பலி, பலிப்பூசை, திருப்பலி கொண்டாட்டம், திருப்பலி வழிபாடு. திருமுழுக்கு நம்மை உயிருள்ள ஆலயத்தின் உயிருள்ள கற்களாக ஆக்குகிறது. அந்த ஆலயத்தில் கிறிஸ்துவையே இறைவனுக்குகந்த பலிப்பொருளாக ஒப்புக் கொடுப்பதே நற்கருணை வழிபாடு. கிறிஸ்துவே ஆலயம், அவரே குரு, அவரே பலிபீடம், அவரே செம்மறி! நாம் அவரோடு இணைந்து, அவரில் இத்தனையும் ஆகிறோம்.


அன்பின் பலி:


இயேசு கிறிஸ்து தம்மையே கல்வாரியில் பலியாக்கப் போவதின் முன் அடையாளமாக நற்கருணையை ஏற்படுத்தினார். இயேசு சிலுவையில் நமக்காக உயிர் தியாகம் செய்ததை இந்த திருப்பலியில் நினைவு கூர்கிறோம். ஏனெனில் தாம் சாவதற்கு முந்திய நாள் இரவில் அப்பத்தை எடுத்து அதைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூரியதாவது : 'அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் எனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்' என்றார் அவ்வண்ணமே திராட்சை இரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்து தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது: 'அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள்ளூ ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம்.இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும். இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்றார்.

எனவே திருப்பலி என்பது அன்பின் உன்னத பலி. பழைய எற்பாட்டின் பலிகள் அனைத்திலும் மேலான பலி. இயேசு கிறிஸ்துவின் மேலான அன்பை இதில் நினைவுகூர்கிறோம். இத்தகைய அன்பின் திருவிருந்தில் நாம் பங்குகொள்ளும் போது அவருடைய பலியில் நாமும் பங்குகொள்கிறோம். கிறிஸ்து தம்மையே வானகத் தந்தைக்கு பலியாகத் தந்தார். இந்த அன்புப் பலியில் நாமும் பங்குபெறும் போது நாமும் நம்மையே வானக தந்தைக்கு பலியாக ஒப்புக்கொடுக்கிறோம்.


திருவிருந்தில் ஒருமைப்பாடு:


மேலும் திருப்பலியின் பகுதியாகிய நற்கருணை விருந்தில் நாம் பங்கு பெறும் போது நாம் அனைவரும் கடவுளின் அன்புமக்கள் ஆகிறோம். எவ்வித வேறுபாடுமின்றி, நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகள் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. திருப்பலி முடிந்ததும் 'திருப்பலி முடிந்தது, இனி நமது வாழ்க்கைப் பலியைத் தொடர்வோம்' என்னும் அறைகூவலுக்கு ஏற்ப கிறிஸ்து காட்டிய அன்பை நமது என்றாட வாழ்வில் காட்ட அழைக்கப்படுகிறோம்.

கத்தோலிக்கத் திருச்சபையில் திருப்பலி என்னும் இந்த திருவருட்சாதனம் உலகம் முழுவதும் ஒரே முறையில் கொண்டாடப்படுகிறது. ஒருவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் எந்த மொழியில் திருப்பலி நடைபெற்றாலும், மொழி தெரியாவிட்டாலும் கூட அதில் முழுமையாகப் பங்குபெற முடியும். உலகம் முழுவதும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வாசகங்களுடன் குறிப்பிட்ட திருநாளாக இருந்தால் அதே வழிபாட்டுடன் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் பல்வேறு நேரமாயிருப்பதால் உலகெங்ககும் எந்த ஒரு மணித்துளியும் விடாமல் திருப்பலி தொடர்ந்து கொண்டாடப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

 

 

 

உறுதிப்பூசுதல்

முன்னுரை:


'உறுதிப் பூசுதல் என்னும் திருவருட்சாதனத்தில் விசுவாசிகள் இன்னும் நெருங்கிய முறையிலே திருச்சபையுடன் பிணைக்கப்படுகின்றனர். தூய ஆவியின் தனி வல்லமையால் உறுதிப்படுத்தப் படுகின்றனர். இவ்வாறு கிறிஸ்துவின் உண்மையான சாட்சிகளாகச் சொல்லாலும் செயலாலும் விசுவாசத்தைப் பரப்பவும் பாதுகாக்கவும் மிகவும் கடமைப்பட்டுள்ளனர்,' (திருச்சபை11)

திருமுழுக்கு பெற்றவர்கள் உறுதிப்பூசுதல் என்னும் அருட்சாதனத்தின் வழியாக கிறிஸ்தவ வாழ்வுப் பயணத்தில் முன்னேறுகின்றனர், அவர்கள் இந்த அருட்சாதனத்தில், பெந்தகோஸ்தே நாளில் ஆண்டவர் அனுப்பிய அதே தூய ஆவியைப் பெற்றுக் கொள்கின்றனர்.
தூய ஆவி கொடுக்கப்படுவதால் விசவாசிகள் இன்னும் முழுமையாக கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தவர்கள் ஆகின்றனர். திடம் பெறுகின்றனர், கிறிஸ்துவின் உடலை அன்பிலும் விசுவாசத்திலும் கட்டி எழுப்பக் கிறிஸ்துவுக்குச் சான்று பகரக் கூடியவராகின்றனர். அவர்கள் ஆண்டவரின் அழியா முத்திரையால் பொறிக்கப்படுவதால் உறுதிப்பூவுதல் ஒரே முறைதான் அளிக்கப்படும். (சடங்குமுறை1,2)

 

தூய ஆவியின் கொடைகளும் கனிகளும்:


உறுதிப்புசுதல் வழியாக நாம் தூய ஆவியின் கொடைகளான ஞானம், புத்தி, அறிவு, திடம், பக்தி, விமரிசை, தெய்வபயம் எனும் ஏழு கொடைகளையும் பெறுகிறோம். உறுதிப்புசுதல் பெற்றவர் தூய ஆவியின் கனிகளான பரிவன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, கனிவு, பரிவு, நன்னயம், பெருந்தன்மை, மென்மை, நம்பிக்கை, ஒழுங்கு, தன்னடக்கம், கற்பு ஆகியவைகளைத் தங்கள் வாழ்கையில் கடைப்பிடிக்க ஊக்கம் பெறுகிறார்கள். திருமுழுக்குப் பெற்ற யாரும் தக்க தயாரிப்புடன் இத்திருவருட்சாதனத்தைப் பெறலாம். இத்திருவருட்சாதனத்தை யாரும் இருமுறை பெற இயலாது.

யார் யார்?


வழக்கமாக உறுதிப்பூசுதலை வழங்குபவர் அப்போஸ்தலர்களின் வழித்தோன்றல்களும், தலத் திருச்சபையின் தலைவருமான ஆயரே. அவருடைய அனுமதியின் பேரில் குருவும் நிறைவேற்றலாம். உறுதிப்பூசுதல் பெறுவோருக்கு ஞானத்தாய் தந்தையர் இருவரில் ஒருவராவது இருப்பது அவசியம். திருமுழுக்கில் ஞானப் பெற்றோராக இருந்தவரே உறுதிப்பூசுதலிலும் ஞானப் பெற்றோராக இருப்பது சிறப்பானது.
ஆயர் அல்லது ஆயரால் அதிகாரம் பெற்ற குரு |கிறிஸ்மா| என்னும் புனித தைலத்தால் உறுதிப்பூசதல் பெறுபவரது நெற்றியில் பூசி .........(பெயர்) தூய ஆவியின் முத்திரையைப் பெற்றுக் கொள், பரம தந்தையின் உன்னத கொடை அவரே!
உறு.பெறு. : ஆமென். என்று சொல்லும் இப்பகுதி உறுதிப்புசுதலின் முக்கிய பகுதியாகும்.

 

 

 

திருமணம்

 

 

முன்னுரை:


அன்பும் பிணைப்பும்: கடவுள் ஆணும் பெண்னுமாகப் மனிதனைப் படைப்பின் தொடக்கத்திலேயே உண்டாக்குகிறார். திருமணத்தின் முக்கியமான பண்பு அவர்களின் இணைபிரியா அன்புளூ பிரிக்கமுடியாத பிணைப்பு. திருமணம் என்னும் இந்த பிரிவுபடுத்த முடியாத பிணைப்பால் அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களையே முழுமையாக தன்னலமற்ற அர்ப்பணிப்பால் ஒரு குடும்பமாக வாழ அழைக்கப்படுகிறார்கள்.

உடன்படிக்கை:

 

கத்தோலிக்க திருமண அருட்சாதனம் என்பது ஒரு உடன்படிக்கை. கணவனும் மனைவியும் எந்தவித வறுப்புறுத்தலுமன்றி, எவ்வித வெளி அச்சுறுச்துதலுமின்றி முழுமனதுடன் பரிமாறிக்கொள்ளும்

வாக்குறுதி: இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருந்து, வாழ்நாளெல்லாம் நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறனர். தங்கள் வாக்குறுதி மூலம் இத்திருவருட்சாதனதை நடத்துவது திருமணத் தம்பதியரே. குருவும் மற்ற இரு நபர்களும் சாட்சிகளளே. இவ்வாக்குறுதியானது தம்பதியரில் ஒருவர் இறக்கும் வரை ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துகிறது.

கிறிஸ்தவ மணமக்கள் தங்களின் இப் புது நிலமையிலிருந்து எழும் கடமைகளையும் மாண்பையும் செயல்படுத்துவதற்கு இவ் அருட்சாதனத்தின் வழியாக வலுப் பெறுகின்றனர். ஒருநிலையில் திருநிலைப்படுத்தப் படுகிறார்கள். இந்த திருவருட்சாதனத்தின் ஆற்றலால் அவர்கள் தங்களின் திருமண மற்றும் குடும்பக் கடமைகளை நிறைவேற்றுகின்றனர், விசுவாசம், நம்பிக்கை, பரம அன்பு ஆகியவற்றால் தங்கள் வாழ்வு முழுவதையும் நிறைத்து நிற்கும் கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பப்படுகின்றனர், அவ்விதமே ஒருவர் ஒருவரைப் புனிதப்படுத்துகின்றனர், இவ்வாறு அவர்கள் ஒன்று சேர்ந்து இறைவனை மாட்சிப்படுத்துகிறார்கள்.

திருச்சபையின் வழிகாட்டுதல்:

 

குடும்பத்தின் உயிருள்ள உறுப்பினர் என்ற முறையில் குழந்தைகள் தங்கள் பெற்றோர் புனிதமடையத் தங்களுக்குரிய வகையில் உதவுகிறார்கள். (2 வத். சங்க ஏடு: இன்றைய உலகில் திருச்சபை: 48)

திருமண அன்பு திருமணத்திற்கே உரிய செயலாகிய தாம்பத்திய உறவில் வெளிப்படுத்தப்படுகிறது, முழுமையடைகிறது. ஆகையால் எச்செயல்கள் வழியாக மணமக்கள் தூய்மையான முறையில் தமக்குள் நெருங்கி ஒன்றிக்கிறார்களோ, அச்செயல்கள் நேர்மையானவை, மாண்பு பெற்றவை.... மணமக்கள், புனித வாழ்வு நடத்துவதற்குரிய அருளால் வலுப்பெற்று, அன்பின் உறுதி,பெருந்தன்மையுடைய உள்ளம்,தியாக உணர்வு ஆகியவற்றை விடாமுயற்சியடன் கடைப்பிடித்து அவற்றை அடைந்திட செபத்தில் வேண்டுதல் தேவை. (2 வத். சங்க ஏடு: இன்றைய உலகில் திருச்சபை:49)

குழந்தைகள் திருமணத்தில் மிகச் சிறந்த கொடையாக இருப்பதுடன், பெற்றோரின் நலனுக்கும் அவர்கள் பெரிதும் உதவுகின்றனர். (2 வத். சங்க ஏடு:இன்றைய உலகில் திருச்சபை:50)


மணமக்களே தங்களுக்குள் ஒரே அன்பாலும் மன ஒற்றுமையாலும் ஒருவர் ஒருவரை புனிதப்படுத்துவதாலும் இணைந்திருப்பார்களாக. (2 வத். சங்க ஏடு: இன்றைய உலகில் திருச்சபை:52)

 

தயாரிப்பு:

இத்திருவருட்சாதனத்தைப் பெறுவதற்கு தக்க தயாரிப்பு தேவை. இத்தயாரிப்புக்காக ஒவ்வொறு பங்கிலுமோ அல்லது மறைவட்ட அளவிலோ அல்லது மறைமாவட்ட அளவிலோ பயிற்சி வகுப்புகள் அல்லது கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இப் பயிற்சி வகுப்புகள், திருமணம் முடிக்க இருக்கும் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமண வயது வந்த ஆண், பெண் யாரும் இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கு கொள்ளாம்.


ஆலோசனைகள்:
ஆன்மீக தயாரிப்பு: திருமணம் என்பது வாழ்கையில் நடக்கும் மிக முக்கியமான நிகழ்ச்சி. என்றும் நினைவில் நிற்கக்கூடியது. இதற்கு நல்ல தயாரிப்புடன் பெற்றோரும் மணமக்களும் ஆயத்தம் செய்யவேண்டும். மணமகனும் மணமகளும் ஆன்மீக தயாரிப்பாக நல்ல பாவசங்கீத்தனம் செய்ய வேண்டும். திருமணத்திற்கு முன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன் மணமக்கள் இதைச்செய்ய பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். மணமக்களின் பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் வாய்ப்பு இருந்தால் அவர்களும் இந்திருவருட்சாதனத்தைப பெறுவது நல்ல காரியம். தங்கள் இல்வாழ்வு நன்றாக அமைய மணமக்கள் வேண்டுவதோடு இரு குடும்பங்களும் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். மற்ற எல்லா ஏற்பாடுகளை திட்டமிட்டு தகுந்த ஏற்பாடுகள் செய்வது போல் திருப்பலிக்கும் செய்ய முன் வரவேண்டும்.

 

திருப்பலி தயாரிப்பு:

முதன்முதலாக சரியான நேரத்திற்கோ அதற்கு முன்னதாகவோ மணமக்கள் ஆலயதிற்கு வர ஏற்பாடு செய்ய வேண்டும். குருக்களையும் மற்றவர்களையும் நமது சௌகரியத்திற்காக காக்க வைப்பதை தவிற்க வேண்டும். அதற்காக பெற்றோர்கள் - சடங்குகள்,அழகு படுத்துதல், ஆசி பெறுதல், வாகன ஏற்பாடு, இசை முழக்குவோர், எல்லவற்றையும் தக்க நேரத்தில் தயாராக்க கவனமாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஆலயத்தையும் அலங்காரம் செய்ய தகுந்த உறவினர்களையோ முடியாத பட்சத்தில் பூக்களை கொண்டாவது பீட அலங்காரங்களைச் செய்யலாம். வாசகங்களை மணமக்களே வாசிக்க முன்வரவேண்டும். அல்லது மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் வாசிக்க முன்வரலாம். அதை முன்னரே பங்குத் தந்தையிடம் ஆலோசனை செய்து வாசகங்களை வாசித்துப் பழகி வரலாம். சிறப்பான விசுவாசிகள் மன்றாட்டை குடும்பத்தாரே தயார் செய்து பாடலாம் அல்லது வாசிக்கலாம்.(இந்த இணையத்தளத்தில் மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது). மணமக்களும் அவர்களின் குடும்பத்தாரும் காணிக்கைப் பவனியில் கலந்து கொள்ளாம். மனக்கலக்கத்தோடும் சோகமான முகத்துடனும் வருவதை தவிற்க முயலவேண்டும். மகிழ்ச்சியோடு புதிய வாழ்கையை இறைவனின் திருமுன்னிலையில் ஆரம்பிக்க போகிறோம் என்ற உணர்வுடன் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் வரமுற்படவேண்டும். பராக்கைத் தவிர்த்து திருப்பலியில் அனைவரும் பக்தியோடு மணமக்களுக்காக ஜெபிப்பது மிக மிக முக்கியம்.


சம்பிரதாயச் சடங்குகள்:

சடங்குகள் சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பதில் தவறில்லை. ஆனால் சிறுபிழைகள், எதிர்பாராத அசௌகரியங்கள், குறைகள், ஏற்படும் போது அதை பெரிது படுத்தாமல், பெருந்தன்மையுடனும் விட்டுகொடுத்தும், நான் பெரியவன் நீ பெரியவன் என்று பெருமை பாராட்டாமல் இரு குடும்பத்தாரும் இணங்கிய முறையில் நடந்துகொள்வது மணமக்களுக்கு மிகுந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என்பதை நினைவில் இருத்தி திருமணவிழாவினை இரு குடும்பத்தாரும் அனைவரும் போற்றும் படியாக நடத்திக்காட்ட முன்வரவேண்டும்.

 

 

 

குருத்துவம்

 

 

முன்னுரை:


ஓர் உடலாக விசுவாசிகளை ஒன்று சேர்க்கும்படி, அவர்களில் சிலரை ஆண்டவர் பணியாளர்களாக ஏற்படுத்தினார். அவ்வுடலில் உறுப்புகள் எல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை;. (உரோ.12 ளூ 4) இப்பணியாளர்கள் விசுவாசிகளின் சமூகத்தில் குருத்துவ நிலையின் புனித அதிகாரத்தைக் கொண்டு பலி ஒப்புக் கொடுக்கிறார்கள், பாவங்களை மன்னிக்கிறார்கள், மேலும் குருத்துவ அலுவலை மக்களுக்கு கிறிஸ்துவின் பெயரால் வெளிப்படையாக நிறைவேற்றுகிறார்கள். ஆகவே, தந்தையால் தாம் அனுப்பபட்டது போல், கிறிஸ்து மறை தூதர்களை அனுப்பி வைத்தார்.

 

 

அதே மறைதூதர்களின் வழியாகவே அவர்களின் வழிவருபவர்களான ஆயர்களுக்குத் தம்முடைய அர்ச்சிப்பிலும் பணியிலும் பங்கு அளித்தார். ஆயர்களோடு சார்ந்து நின்று அவர்களது பணியில் குருக்கள் பங்கு கொள்கிறார்கள். இவ்வாறு குருத்துவ நிலையில் நியமிக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவால் ஒப்படைக்கப்பட்ட மறைத்தூதுப் பணியைச் சரிவர நிறைவேற்றும் பொறுட்டு ஆயர் திருநிலையுடன் ஒத்துழைப்பவர்கள் ஆகிறார்கள்.

 


குருத்துவம் வழியே குருக்கள் தூய ஆவியின் பூசுதலால் ஒரு தனிப்பட்ட முத்திரை கொண்டு குறிக்கப்படுகிறார்கள். இவ்வாறு தலையாகிய கிறிஸ்துவின் பெயரால் செயல்படும்படி, அவர்கள் குருவாகிய கிறிஸ்துவின் சாயலைப் பெறுகிறார்கள். (குருக்களின் பணியும் வாழ்வும், 2)


பொதுக் குருத்துவம்:
கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் கிறிஸ்துவின் பொது குருத்துவத்தில் பங்கு கொள்கிறோம். நமது சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க அழைக்கப்படுகிறோம். இப்பணிக்காக இறைவன் சிலரை தனிப்பட்ட முறையில் அழைக்கிறார்.இந்த அழைப்பை பெறுகிறவர்கள் இறைப்பணி செய்வதற்காக தங்கள் வாழ்கையை அர்ப்பணிக்கிறார்கள். மனைவி, பிள்ளைகள் என்ற குடும்ப உறவைத் தவிர்த்து இறைவனுக்கும் அவருடைய மக்களுக்கும் பணிசெய்ய சிறப்பாக அழைக்கப்படுகிறார்கள்.


குருத்துவத்தின் மூன்று நிலைகள்:
இவ்வழைப்பில் மூன்று நிலைகள் உள்ளன. திருத்தொண்டர் (தியாக்கோன்), குரு, மற்றும் ஆயர். இந்திய திருநாட்டில் இறைப்பணி செய்வதற்கு அதிக பேர் முன்வருவதால் திருத்தொண்டர் பணிக்கென யாரும் தனியாகத் திருநிலைப்படுத்தப் படுவதில்லை. குருவாககப் பயிற்சி பெறும் அனைத்து குருமாணவர்களும் தங்களின் பயிற்சியின் இறுதி ஆண்டிற்கு முந்திய ஆண்டில் திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்படுகின்றனர். மேலை நாடுகளில் திருத்தொண்டர் பணிக்கென பயிற்சி பெற்று திருத்தெண்டர்களாக திருநிலைப்படுத்தப் படுகின்றனர். இத் திருத்தொண்டர்கள் திருமுழுக்கு, திருமணம், நோயில் பூசுதல் ஆகிய மூன்று திருவருட்சாதனங்களை நிறைவேற்றலாம். அவர்களின் முக்கிய பணி நற்செய்தி அறிவுப்புப் பணி. இவர்கள் பங்கு பணித்தள குருவோடு இணைந்து பணியாற்றுவார்கள்.


மறைமாவட்ட குருக்கள் :
குருக்களாக திருநிலைப்படுத்தப் படுகிறவர்கள் இரு விதமான வாழ்கை முறையை தெரிந்து கொள்ளலாம். மறைமாவட்ட குருக்களாக தங்களின் ஆயரின் வழிநடத்துதலில், கற்பு, கீழ்படிதல் வாக்குறுதியின் படி வாழ்வார்கள். பொதுவாக தங்களின் சொந்த மறைமாவட்டத்தில் பங்குகளில் அல்லது மறைமாவட்ட நிர்வாகத்தின் ஏதாவது பொறுப்புகளில் பணிபுரிவார்கள். தங்களுடைய ஆயருக்கு கட்டுப்பட்டவர்கள்.


சபை சார்ந்த குருக்கள்:
கத்தோலிகக திருச்சபையில் மறைமாவட்ட குருக்கள் தவிர சபை சார்ந்த குருக்களும் திருநிலைப்படுத்தப் படுகிறார்கள். இவர்கள் தங்கள் சபை எத்தகைய பணி வாழ்வை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டதோ அத்தகைய பணிவாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களில் சபைத் தலைவருடைய வழிநடத்துதலின் கீழ் கற்பு, கீழ்படிதல், ஏழ்மை ஆகிய வாக்குறுதியின் படி பொதுவாக இணைந்து(குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேர்) பணிசெய்வார்கள். உதாரணமாக இயேசு சபை குருக்கள், தூய பிரான்சிஸ்கன் அஸிஸி, சலேசிய குருக்கள், பல்வேறு கல்வி, சமூக, நிறுவனங்களிலும், பங்குத் தளங்களிலும் பணிசெய்வதைக் காணலாம். இவர்கள் தங்கள் சபை தலைவருக்கோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட பதிலி தலைவருக்கோ கட்டுப்பட்டவர்கள்.

 

குருக்களின் பணிவாழ்வு:
குருக்களின் பணிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். நற்செய்தி அறிவிக்கும் பணி, வழிநடத்தும் பணி, ஆளும் பணி. குருக்களின் நற்செய்தி அறிவிப்புப் பணி என்பது பணித்தளத்தில் திருப்பலி ஒப்புக்கொடுப்பதிலும் மற்ற அருட்ச் சாதனங்களை நிறைவேற்றுவதும் சிறப்பாக நற்செய்தியை போதிப்பதிலும் வாழ்ந்து காட்டுவதிலும் அடங்கியுள்ளது. வழிநடத்தும் பணியானது பணித்தள மக்களை ஆன்மீக, சமுக தேவைகளில் தலைவராயிருந்து மக்களை வழிநடத்துவதிலும், வழிகாட்டுவதிலும் அடங்கியுள்ளது. ஆழும் பணியானது பங்குத் தளத்தில் நிர்வாக ரீதியாக அவர் ஆற்றும் பணிகளை உள்ளடக்கியது.

 

ஆயர் நிலை:
குருத்துவத்தின் நிறைவு ஆயராக திருநிலைப்படுத்தப்படுதல். ஆயர் என்பவர் இயேசு கிறிஸ்துவின் நேரடி அப்போஸ்தலர்களின் வழிவந்தவர்கள். ஆயர் என்பவர் தம்முடைய பொறுப்பின் படி தம்மிடன் ஒப்படைக்கப்பட்ட மந்தையை காத்து, வழிநடத்தும் சிறப்புப் பணியைச் செய்ய அழைக்கப்படுகிறார். ஆயருக்கும் நற்செய்தி அறிவிக்கும் பணியும், வழிநடத்தும் பணியும் ஆளும் பணியும் முக்கியமான பணிகள்.


தேவ அழைத்தல்:
தேவ அழைத்தல் என்பது இறைவன் அருளும் கொடை. யாரும் அதைப் பெற உரிமை கொண்டாட முடியாது. இறைவன் அழைத்தாலன்றி யாரும் இப்பணிக்கு வர இயலாது அதில் நிலைத்து நிற்கவும் இயலாது. குருவாவதற்கு கிறிஸ்தவராகவும், நல்ல உள்ளம் கொண்டவராகவும் இறைப்பணிசெய்ய ஆர்வமுள்ளவராகவும் நல்ல உடல்நலத்தைக் கொண்டவராகவும் இருக்கவேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது கல்லூரி முடித்தவர்கள் சேரத் தகுதியுடையவர்கள். முதலில் இரண்டு வருடங்கள் தயாரிப்பாகவும் மூன்று வருடங்கள் தத்துவ இயலும் ஒரு வருடம் இடைநிலைப் பயிற்சியும் பின்னர் நான்கு வருடங்கள் இறைஇயலும் பயிலவேண்டும். ஆக மொத்தம் குறைந்தது பத்து வருட தயாரிப்பு தேவை. மேலும் விபங்களுக்கு உங்கள் பங்குத் தந்தையை அனுகலாம்ளூ தக்க விபரம் தருவார்கள்.
'இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.' -மத்தேயு 10 :42 என்ற நம் ஆண்டவரின் வார்த்தைக்கேற்ப இறைஅடியார்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்ய முற்பட வேண்டும். தேவ அழைத்தலுக்காகவும் குருக்களுக்காகவும் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.

 

 

 

நோயில் பூசுதல்

 

நோயில் பூசுதல் என்னும் திருவருட்சாதனமானது குணப்படுத்தும் திருவருட்சாதனம். மனிதனின் நோயும் இறப்பும் கடவுளின் திட்டத்தில் இருந்ததில்லை. இயேசுவே பல முறைகளில் நோயுற்றவர்களை குணமாக்குவதையும், இறந்தோரை உயிர்ப்பிப்பதையும் நற்செய்தியில் நாம் காண்கிறோம்.
தாய் திருச்சபையும் நோயுற்றோருக்கு சிறப்பான பணியைச் செய்யக் காத்திருக்கின்றது. நோயுற்றோர்க்கு நற்கருணை வழங்குவதிலும், நோயுற்றோரை மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ சென்று பார்த்து வருவது குருக்களின் முக்கிய கடமையாகும். உடலும் ஆன்மாவும் சேர்ந்ததுதான் மனிதன். மனிதனின் உடல்நலத்திலும் ஆன்மீகநலத்திலும் நலம் பெற்று வாழ திருச்சபை பல்வேறு வகைகளில் உதவிசெய்கிறது.

 

நாம் சுகவீனமுற்றிருக்கும் போது பயப்படுகிறவர்களாகவும் மனத்தளவில் சோர்வுற்றவர்களாகவும் காணப்படுகிறோம். பலவேளைகளில் கடவுள் நம்மோடிருக்கிறார் என்பதை மறந்து விடுகிறோம். நமது சுகவீனத்தில் இயேசுவே நமக்கு துணையாய் இருந்து நமக்கு பலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறார். அதுவும் நோயில் பூசுதல் என்னும் திருவருட்சாதனத்தின் வழியாக நமக்கு நற்சுகத்தையும் ஆன்ம பலத்தையும் கொடுக்கிறார்.

 


இயேசு தம் பன்னிரு சீடர்களைச் சுற்றிலுமுள்ள ஊர்களுக்கு அனுப்பினார். அவர்கள் புறப்பட்டுச் சென்று, மக்கள் மனம் மாற வேண்டும் என்று பறைசாற்றினார்கள். பல பேய்களை ஓட்டினார்கள். உடல் நலமந்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள் (மாற்கு6 ளூ 12, 13)

 

இவ்விதம், நோயில் பூசுதல் திருவருட்சாதனத்தை இயேசு நிறுவினார் என்று அறிகிறோம்.
புனித யாகப்பரும் இதை உறுதிபடுத்தி, பரிந்துரைக்கிறார்ளூ உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால் திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவர். ஆண்டவர் அவரை எழுப்பிவிடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார். (யாக்.5 ளூ 14, 15) சாவின் ஆபத்தில் இருக்கத் தொடங்கும் போதே அத்தருணம் இந்த அருட்சாதனத்தைப் பெறும் சரியான நேரம் என உறுதியாகச் சொல்லலாம் (திருவழிபாடு 73)

 

இந்த அருட்சாதனத்தால் இறை நம்பிக்கை வளர்கிறது, இறப்பின் போது ஏற்படும் கவலைகளையும் சோதனைகளையும் தாங்க உறுதியான அருள், இறைவனின் திருவுளமாயின் நோயினின்று விடுதலை, பாவமன்னிப்பு, கழுவாய் கிடைக்கின்றன.